கண் பார்வையை பறிக்குமா சர்க்கரை நோய்..! மருத்துவர்கள் அலர்ட்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதா, இந்தியாவில் எத்தனை பேருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது, சர்க்கரை நோயால் கண் பாதிப்பு ஏற்படுவதை கண்டறிவது எப்படி, மேலும் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

முன்பெல்லாம் வயது முதிர்வு ஏற்படும் போது தான் பல்வேறு நோய்கள் வந்து நம்மை தொற்றி கொள்ளும். நோய்கள் குணமாகிறேதோ இல்லையோ மருந்து மாத்திரைகள் உட்கொண்டு உயிர் வாழ்ந்து வரும் காட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுவோம். இது புறம் இருந்தாலும் தற்போது இளம் வயதிலேயே பல்வேறு நோய்கள் நம்மை சூழ்கின்றன. குறிப்பாக சர்க்கரை நோய் வயது வித்தியாசமின்றி வருகிறது. இந்த சர்க்கரை நோய் இளம் வயதினருக்கு எப்படி வருகிறது. இந்த சர்க்கரை நோய்க்கும் கண்ணிற்கும் என்ன தொடர்பு என அலட்சியமாக இருந்தவர்களுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து மருத்துவர்கள் சமீபத்தில் மேற்கொண்டு வெளியிட்ட ஆய்வு அறிக்கை சர்க்கரை நோயாளிகளின் மனதில் பேரிடியாக விழுந்துள்ளது. 

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 2.1 கோடி பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்களை இந்திய, இங்கிலாந்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் 11 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது என்றும் இவற்றில் நான்கில் ஒரு பங்கு நபர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவது போன்று திடீரென கண் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ரேலா மருத்துவமனை மருத்துவர் ஸ்ருதி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தங்களை எந்த நோயும் தாக்காது என்றும் இதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என எண்ணுபவர்களுக்கே சர்க்கரை நோய் பாதிப்பால் கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ரேலா மருத்துவர் ஸ்ருதி.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் AI தொழில்நுட்பம் மூலம் பார்வை பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு முன்னேற்றங்களை இந்திய மருத்துவத்துறை அடைந்து வருகிறது.  சர்க்கரை நோய் உள்ளதா, இல்லையா என்பதை மிகக் குறைந்த செலவில் அனைவராலும் அறிய முடியும் என்றும், ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரை நோய் உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும் என மருத்துவர் ஸ்ருதி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மாறி வரும் வாழ்க்கை முறைகேற்ப நோய்களின் தாக்கம் வீரியம் அடைந்து வருகிறது. சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்படும் என ஆய்வறிக்கையில் தற்போது உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

Night
Day