போதிய வசதிகள் இல்லாத ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை - அல்லல்படும் நோயாளிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஏழை, எளிய மக்கள் வந்து செல்லும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் மெத்தனம், மருந்துகள் வழங்குவதில் மெத்தனம் என சொல்லி கொண்டே போகலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன, மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகள் புலம்பி தவிக்கும் நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத சென்னையில் மிகவும் பரபரப்பான இடம் என்றால் அது சென்ட்ரல் ரயில் நிலையம் தான். அதற்கு எதிரே தான் இந்த ராஜீவ் காந்தி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர். பொது மருத்துவம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற போதிலும், பெயரளவுக்கு மட்டும் தான் என்கின்றனர் இங்கு வரும் நோயாளிகள்.

குறிப்பாக, இந்த மருத்துவமனையில் இதய துடிப்பு பரிசோதனைக்கு போதிய மருத்துவர்களும், போதிய கருவிகளும் இல்லாததால் காத்து கிடக்கும் அவல நிலை இருப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இரண்டாவது பிரிவில் மட்டும் நாள்தோறும் 50க்கும் அதிகமான இதய நோயாளிகள், இதய பரிசோதனைக்காக வருவதாகவும், அவர்களை பரிசோதிக்க ஒரு மருத்துவர், ஒரு கருவி மட்டுமே இருப்பதால், பரிசோதனைக்காக ஏராளமான நோயாளிகள் உறவினர்களுடன் மணி கணக்கில் காத்து கிடக்கும் நிலை இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதய துடிப்பு பரிசோதனைக்காக படுக்கையில் காத்து கிடக்கும் நோயாளிகளில் ஒரு சிலர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு கை கால்கள் உதறிவிட்டு கண்கள் மேலேழும்பும் நிலையில் காத்தும் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கட்டான நிலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வருபவர்களுக்கு அவசர சிகிச்சையளிக்க முடியாத நிலையில் தற்போது இந்த மருத்துவமனை மாறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நோயாளிகளை அழைத்து வருவதற்கு போதியளவில் ஸ்ட்ரக்சர் வசதியும் இல்லை எனவும், ஒரே ஸ்ட்ரக்சரில் இரண்டு நோயாளிகளை அழைத்து வரக் கூடிய அவல நிலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நிலவுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

அனைத்து விதமான நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என வெளி தோற்றத்தில் மட்டுமே தெரிவதாகவும், மருத்துவமனையின் உள்ளே வந்து பார்க்கும் போது எல்லாம் ஒரு மாயை என்பது போன்று எல்லா பிரிவுகளிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் அலட்சியத்துடனும், மெத்தன போக்குடன் செயல்படுவதாக நோயாளிகளும், பொதுமக்களும் புலம்பி வருகின்றனர். 

ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசுப் பொது மருத்துவமனை, சிறந்த சேவைக்காக தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள், 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனை உதவியாளர்கள், நாள்தோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெறும் அளவுக்கு வசதிகள் என பெயரவுக்கு மட்டுமே சொல்லி கொள்ள வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 

மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பரிசோதனை கூடங்களில் கூடுதல் கருவிகள் மற்றும் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day