மலர் டீச்சரை விடுங்க... ஐரிஸ் டீச்சரை பாருங்க..!

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோ டீச்சரை கேரளாவை சேர்ந்த தனியார் பள்ளி அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

'ஏஐ' என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போதைய நவீனமயமான உலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. செய்தி வாசிப்பது, விளையாட்டு, சக மனிதர்களுடன் சகஜமாக உரையாடுவது என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பல அசாத்திய சாதனைகளை படைத்து வருகிறது.

இத்தகைய சூழலில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இயங்கும் கேடிசிடி எனும் தனியார்பள்ளியில், மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், கல்வி கற்கும் திறனை அடுத்தநிலைக்கு கொண்டுசெல்லவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘ஐரிஸ்’ என்ற பெயரில் மனித இயல்பு உள்ள ரோபோ டீச்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். 

'மேக்கர்லேப்ஸ் எஜுடெக்' எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ‘ஐரிஸ்’ ரோபோவை உருவாக்கியுள்ள பள்ளி நிர்வாகம், இதன்மூலம் மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆசிரியை உருவில் காட்சியளிக்கும் இந்த ரோபோ, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் பேசும் திறமையை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த ரோபோவால் கைகளை அசைத்து மற்றவர்களிடம் பேச முடியும். பல்வேறு பாடங்களிலிருந்து மாணவர்கள் எழுப்பும் பல கேள்விகளுக்கு சரளமாக பதிலளிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் ரோபோ, சக்கரங்கள் மூலம், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து சென்று மாணவர்களிடம் சகஜமாக உரையாடுகிறது.

மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் இந்த ரோபா, பாடத்தைக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் உதவிகரமாக இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை கேரளாவை சேர்ந்த மேக்கர்லாப்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொழில்நுட்ப மயமான இந்த நவீன காலத்தில், பல்வேறு நன்மைகள் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை, அதனுள் அடங்கியுள்ள அபாயங்களையும் கவனத்தில் கொண்டு, பயன்படுத்த வேண்டும் என்பதே வல்லுநர்களின் பயம் கலந்த கோரிக்கையாக உள்ளது.

varient
Night
Day