கோர்ட் உத்தரவால் சீல் அகற்றம்... வடபத்திரகாளியம்மனை வழிபட்ட மக்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சங்கரன்கோவில் அருகே வடபத்ர காளியம்மன் கோயிலுக்கு வருவாய்துறையினர் வைத்த சீல் நீதிமன்ற உத்தரவு படி அகற்றப்பட்டது. சீல் அகற்றப்பட்டதையடுத்து, கிராம மக்கள் வானவேடிக்கைகள் முழங்க மேளதாளத்துடன் வழிபாடு மேற்கொண்டனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பிள்ளையார் குளம் கிராமத்தில் அமைந்துள்ளது வட பத்திரகாளியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் திருவிழா நடத்தி வழிபாடு செய்வது தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடிய ஒரு பிரிவினருக்கு கோயிலின் உரிமையும் வழிபாடு செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு வழிபாடு செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இரு பிரிவினரும் தனித்தனியாக வழிபாடு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 4ம் தேதி ஒரு பிரிவினர் வழிபாடு மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்தனர். அதே நாளில் மற்றொரு பிரிவினரும் வழிபாடு செய்யப் போவதாக காவல் துறையினிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், அப்பகுதியில்  சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க, கோயிலில் வழிபாடு நடத்த இரு தரப்பினருக்கும் தடை விதித்து வருவாய் துறையினர் கோயிலை பூட்டி சீல் வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிள்ளையார் குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.
 
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயிலில் வழிபாடு மேற்கொள்ள விதித்த தடையை நிறுத்தி வைத்து உடனடியாக சீலை அகற்றி வழிபாடு மேற்கொள்ள அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், வருவாய் துறையினர் கோயிலுக்கு வைத்த சீலை அகற்ற தாமதப்படுத்தியதால், கிராம மக்கள் கோயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினர் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, கிராம மக்களை கோயிலுக்குள் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து கிராமத்தினர் மேளதாளங்களோடு தீச்சட்டி ஏந்தி, வாணவேடிக்கைகளுடன் வடபத்திரகாளியம்மனை வழிபட்டனர்.

Night
Day