இந்திய அரசியலமைப்பு தின கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பதிப்புகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.

இந்திய அரசியலமைப்பு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மலையாளம், மராத்தி, தெலுங்கு, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, ஒடியா மற்றும் அசாமி உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பதிப்புகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ததாகவும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நமது ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என விரும்பியதாகவும் கூறினார். பெண்கள், இளைஞர்கள், பழங்குடியின மக்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் இந்தியாவின் ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தி வருவதாக பேசிய  குடியரசுத் தலைவர், 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது நாட்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என பேசினார்.

தொடர்ந்து பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சம உரிமைகளை உறுதி செய்வதாகவும், சமீபத்தில் நடந்த பீகார் மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு நடந்ததைப் பாராட்டுவதாகவும் கூறினார். ஜனநாயகம் என்ற கருத்து இந்தியாவிற்குப் புதிதல்ல எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் ஞானம், தொலைநோக்கு பார்வை மற்றும் அயராத கடின உழைப்பு ஆகியவை இந்திய குடிமகனுக்கு நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கண்ணியத்தை வழங்கும் அரசியலமைப்பை கொடுத்ததாக கூறினார். அரசியலமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த ஏழு தசாப்தங்களாக சமூக நீதியை உள்ளடக்கிய வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் சமூக-பொருளாதார மாற்றத்தை இந்தியா பின்பற்றி வருகிறது என்றார்.

Night
Day