ராமேஸ்வரத்தில் அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் - நோயாளிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், கோவில்கள், ரயில்வே மேம்பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வரும் மழையால் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் முழங்கால் அளவிற்கு குளம் போல் தேங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதே போல், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் மருத்துவமனையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தினர்.  

ராமநாதபுரத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்புகளில்  மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியது. இதனால் அத்தியாவாசியத் பொருட்கள் வாங்க மக்கள் முழங்கால் அளவு தண்ணீர் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ சந்துக்கள் வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் தலையிட்டு மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதேபோல் அம்பேத்கர் நகர், சுந்தரவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் ராமநாதசாமி கோயில் உள்ளே மழைநீர் புகுந்தது. மேலும், கோயில் நுழைவு வாசல் முன் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால், பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட கோயில்  நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோயிலில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியில் வடிகால் வழியாக மழைநீர் வெளியேறாததால் தொழுநோய் மருத்துவமனையில் மழைநீர் புகுந்தது.  மேலும், அப்பகுதி முழுவதும் மழைநீர் குளம் போல் காட்சியளிப்பதால் தொழுநோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதே போல், சாலைகள் மேடு பள்ளமாகவும் மழைநீர் தேங்கியப்படி இருப்பதால் மாணவ மாணவிகள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மழை நீரை அகற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.


Night
Day