எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற 2வது நாள் ஆலோசனை கூட்டத்தையும் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பாமக மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 2வது நாளாக அன்புமணி ராமதாஸ் இன்றும் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்காததைத் தொடர்ந்து 2வது நாளாகவும் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தை புறக்கணித்திருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் கூட்டணி முடிவு, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள் என அனைவரும் கூட்டத்தில் பங்கேற்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தநிலையில், அன்புமணி மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் பங்கேற்காதது பாமகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்பு தான் என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், அன்புமணி பங்கேற்காத நிகழ்வு உட்கட்சி விவகாரம் என்றார். மிக விரைவில் ராமதாசும், அன்புமணியும் சந்தித்து பேசுவார்கள் என்று ஜி.கே.மணி தெரிவித்தார். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.