திண்டுக்கல்: நெடுஞ்சாலையோர கடைகளில் மினரல் வாட்டர் பாட்டிலில் மிதந்த பூஞ்சைகள்! 07-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல்லில் நெடுஞ்சாலையோர கடைகளில் மினரல் வாட்டர் கேன்கள் சுகாதாரமின்றி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடிநீர் பாட்டிலில் பூஞ்சை மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதால் , அதனை வாங்கி அருந்தும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொடைக்கானலின் அழகை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கடைகளில் தரமற்ற முறையில் விற்கப்படும் உணவுகள் மற்றும் குடிநீரால் சுற்றுலா பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 

கொடைரோடு, அம்மையநாயக்கனூர், சிலுக்குவார்பட்டி, சின்னாளப்பட்டி டோல்கேட் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான கடைகளில் தரமற்ற குளிர்பானங்கள் மற்றும் மினரல் வாட்டர் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. 

இத்தகைய சூழலில் இப்பகுதி கடை ஒன்றில் விற்கப்பட்ட மினரல் வாட்டர் பாட்டில்களில் பூஞ்ஜைகள் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் மிதந்தது, வாடிக்கையாளரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் இதுபோன்ற தரமற்ர குடிநீர் விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனை கவனமின்றி வாங்கி அருந்தும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

பெரும்பாலான வாட்டர் பாட்டில்களில் காலாவதியாகும் தேதிகள் குறிப்பிடாமல் விற்கப்படுவதாகவும், காலாவதி ஆவதற்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள வாட்டர் பாட்டில்களிலும் அழுக்கு துகள்கள், பூஞ்சைகள் மிதப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். 

சாலையோர கடைகளில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களை ஆய்வு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திண்டுக்கல் வாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. 

Night
Day