கையில் பணமின்றி உலகம் சுற்றும் பிரெஞ்ச் வாலிபர்கள் 07-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கையில் பணமின்றி கடந்த 6 ஆண்டுகளாக உலக நாடுகளைச் சுற்றி வருகின்றனர். பாடும் வானம்பாடிகளாகச் சுற்றித் திரியும் 3 வெளிநாட்டு இளைஞர்கள் குறித்த செய்தி தொகுப்பு இதோ....

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான 'கயல்' என்ற திரைப்படத்தில் இரண்டு இளைஞர்கள் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, வெளிநாடுகளில் தங்களுக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். 

அதேபோன்றுதான் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பாடும் வானம்பாடிகளாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பள்ளிப் பருவ நண்பர்களான மார்க், வெல் மற்றும் டேவிட் ஆகிய மூன்று பேரும் உலகம் முழுவதையும் சுற்றி பார்க்க வேண்டும் என்ற அவா காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக தங்கள் நாட்டில் இருந்து தொடங்கி பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். 

கையில் பணம் இன்றி உலகை சுற்றிவரும் மூவரும், ஒவ்வொரு நாட்டிலும் பொதுமக்களிடம் உதவி கேட்டு, அதன் மூலம் தங்கள் பயணசெலவு, உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கின்றனர். 25 நாடுகளை சுற்றியுள்ள இந்த 3 வானம்பாடிகளும், தற்போது 26-வது நாடாக பெருமைமிகு இந்தியாவுக்கு அதிலும் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திருச்சியில் பயணம் மேற்கொண்டுள்ள இந்த உலகம் சுற்றும் வாலிபர்கள், கையில் பணமின்றி யாசகம் பெற்று வருகின்றனர். இதற்காக திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உதவி கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் முகத்தில் புன்னகை தவழ காத்திருந்தனர். உதவி அட்டையில், ' நாங்கள் பணமின்றி உலகை சுற்றி வருகிறோம், எங்களுக்கு உதவுங்கள் நன்றி' என எழுதி வைத்திருந்தனர். 

அப்போது பேசிய இளைஞர் மார்க், 'தாங்கள், எகிப்து, கிழக்கு நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கடந்து தற்போது இந்தியா வந்துள்ளதாகவும், இந்தியாவில் புட்டபர்த்தி, ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை காண வேண்டும்' என ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, 'இந்தியா ஒரு அற்புத நாடாக விளங்குவதாகவும், தாங்கள் அவ்வப்போது பல அற்புத மனிதர்களை சந்திப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்'. 

'இந்திய மக்கள் நட்புறவுடன் பழகுவதுடன், ஆங்கிலத்தில் உரையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதனால் அவர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ள முடிவதாகவும்' பாடும் இளைஞர் மார்க் மகிழ்ச்சி தெரிவித்தார்.

எது எப்படியோ, யாசகம் கேட்டு கையேந்தி நிற்கும் இளைஞர்களுக்கு திருச்சி மக்கள் தாராளமாக உதவுவார்கள் என்ற நம்பிக்கை உலகை சுற்றும் 3 வெளிநாட்டு இளைஞர்களுக்கும் உள்ளது. நம்பிக்கைதானே வாழ்க்கை....

Night
Day