கஞ்சா ஆயில் கடத்தல்... சினிமாவுக்கு மும்பை... நிஜத்தில் தமிழ்நாடு..!

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 71 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் மற்றும் பலகோடி ரூபாய் மதிப்பிலான 950 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளர். தமிழகத்தில் தொர்ச்சியாக போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கடத்தல் சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் முன்பெல்லாம், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர் என்ற செய்தி, எப்போதாவது தொலைக்காட்சிகளிலும், செய்தி தாள்களிலும் வருதை பார்த்திப்போம். ஆனால் தற்போது, அது தினசரி செய்தியாகவே மாறியுள்ளதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளின் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக திருச்சி சுங்கத்துறை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள இறால் பண்ணை ஒன்றில் கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற சுங்கத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 71 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோ கஞ்சா ஆயில், மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான 950 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும், கஞ்சா கடத்தல் தொடர்பாக திருச்சி மாவட்டம் தொண்டியை சேர்ந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, பறிமுதல் செய்த கஞ்சா எண்ணெய் மற்றும் கஞ்சா மூட்டைகள், பலத்த பாதுகாப்புடன் ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. 

பலகோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதேபோல், வேறு ஏதேனும் பொருட்கள் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டபம் பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா கடற்பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தி சென்ற 108 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய்யை நடுக்கடலில் சுங்கத்துறையினரும் இந்திய கடலோர காவல் படையினரும் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். தற்போது, மீண்டும் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 71 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் குறிப்பாக கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில், பலகோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா எண்ணெய் மற்றும் கஞ்சா போதைப் பொருள்கள் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வரும் சம்பவம், போதை பொருட்களின் விற்பனை மையமாக தமிழகம் திகழ்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day