தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம்  அதிகரித்து காணப்பட்டு வந்தது நிலையில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து  மத்திய பேருந்து நிலையம், காமராஜர் சாலை, ராயபுரம், கருவம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கொடைக்கானல், குறிஞ்சி நகர், பெருமாள் மலை, பேத்துபாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சு வீடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதே போல பண்ணைகாடு, தாண்டிக்குடி போன்ற மலைக்கிராம பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, செம்பனார்கோயில், ஆக்கூர், நீடூர் மங்கைநல்லூர், பட்டவர்த்தி மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், தேவிகாபுரம் மற்றும் சேத்துப்பட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் போளூர், சேத்துப்பட்டு, தேவிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென 2 மணி நேரமாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காட்டில் உள்ள முக்கிய சாலையான அண்ணா பூங்கா சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கி நின்றதால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரில் மிதந்தவாறு சென்றன. மேலும், மழை காரணமாக பனிமூட்டம் நிலவியதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை வாகனஓட்டிகள் இயக்கி செல்கின்றனர்.

திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், கருமண்டபம், பாலக்கரை, ஏர்போர்ட், காஜாமலை ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக இரண்டாவது நாளாக கனமழை பெய்தது. இதே போல், கேகே நகர், சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் டோல்கேட், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரம் பல இடங்களில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள்  அவதி அடைந்தனர்.

இதேபோல் நாகை மாவட்டம்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புத்தூர், வேளாங்கண்ணி, திருமருகல், கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரணியம், தலைஞாயிறு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது, இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் சாகுபடிக்கு நெல் விதைப்பு செய்த விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான அன்னவாசல், சித்தன்னவாசல், மாங்குடி, மாராயப்பட்டி, குறுக்கலையா பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  இந்த மழையால் நீர்நிலைகள் நிரம்பத் தொடங்கியதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரப்பகுதி மற்றும் திருநள்ளாறு, திருப்பட்டினம், நிரவி, நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் பெய்த கனமழையால், சன்னாபுரம் கோவில், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரப்படாததால் மழை நீர் வடிய வழி இல்லாமல்  சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.  எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் புதர் மண்டி கிடைக்கும் வடிகால் வாய்க்காலை தூர் வார வேண்டும் என்றும், 
சேதமான நெற்பயிர்களுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day