பெரம்பூரில் சாலைகளை சூழ்ந்த மழைநீர் - வாகன ஒட்டிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிய வடிகால் வசதி முறையாக இல்லாததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். 

சென்னை அருகே நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதன் காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு இடையே வாகனங்களை இயக்கி வருகின்றனர். சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

சென்னையில் பெய்த தொடர் மழையால் பெரம்பூர் அருகே மேட்டுப்பாளையம் கோவிந்தன் தெரு பகுதியில் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றி மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Night
Day