எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மாதம் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே பல்வேறு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த ஒரு மாதமாக நடந்த மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் முடங்கியது.
இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு மக்களவை கூடியபோது, எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் தேதி குறிப்பிடாமல் மக்களவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
பெரும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
இதில் குறிப்பாக, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா, வருமான வரி திருத்த மசோதா, இந்திய துறைமுக மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா ஆகியவை இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மக்களவையில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றிய மத்திய அரசு, அந்த மசோதாவை இன்றைக்குள் மாநிலங்களவையில் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதேபோல், தீவிர குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளை பதவிநீக்கம் செய்யும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக, அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.