கொட்டித்தீர்த்த மழை... தத்தளிக்கும் மும்பை...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆந்திராவிற்கு அருகே வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் அரபிக்கடல் வரை நிலவும் தாழ்வுப் பகுதி காரணமாக, மராட்டிய மாநிலத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன்படி மும்பை, தானே மற்றும் பல்கார் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வர்த்தக நகரான மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகாலை முதல் அதி கனமழை கொட்டி தீர்த்ததால், பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி காணப்படுகிறது. 

குறிப்பாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கிங்ஸ் ரவுண்டா, காந்தி மார்க்கெட், குர்லா மற்றும் செம்பூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், அந்தரி சுரங்கப்பாதை, மிலன் சுரங்கப்பாதை ஆகிய சுரங்கப்பாதைகளும் நீரில் மூழ்கின. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முக்கியம் மற்றும் அவசர தேவை இல்லாத எந்த பயணத்தையும் மக்கள் மேற்கொள்ள வேண்டாம் என மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. 

இதற்கிடையில் டாடார், சியோன் ஆகிய ரயில் நிலையங்களில் மழைநீர் சூழ்ந்ததால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடுமையாக அவதியுற்றனர்.

இந்நிலையில் விக்ரோலி மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழையினால்  நிலச்சரிவு ஏற்பட்டதில் குடிசை இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிலர் காயமடைந்துள்ளனர். 

மும்பை மற்றும் தானே நகரங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. பால்கர் பகுதியில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் இம்மழை ஆகஸ்ட்.19ம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Night
Day