எழுத்தின் அளவு: அ+ அ- அ
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஒரு சில பிரிவுகளுக்கு மட்டும் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த ஏப்ரம் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 70க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பினை வழங்கியது. இந்த வழக்கில் முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முழுமையான முகாந்திரங்களை காண முடியவில்லை என தலைமை நீதிபதி தெரிவித்தார். ஒரு நபர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் மட்டுமே வக்பு வழங்க முடியும் என்ற திருத்தத்திற்கு தடை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார். வக்பு நிலம் தொடர்பாக தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது எனவும், வக்பு நிலம் தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் ஆட்சியருக்கு அதிகாரங்களை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கு மேல் இருக்கக் கூடாது எனவும், வக்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "வக்பு வாரிய திருத்த சட்டம் 2025" முழு சட்டத்திற்கும் தடை விதிக்க முடியாது சில பிரிவுகளுக்கு மட்டுமே தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.