மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

SIR உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இரு அவைகளிலும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் நாளான இன்று மக்களவையில் அவை நடவடிக்கை தொடங்கியவுடன் மறைந்த 5 உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து கேள்வி நேரம் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எஸ்.ஐ.ஆர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியிருந்த நிலையில் அதனையேற்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு இடையே மக்களவையின் அவை நடவடிக்கைகள் நீடித்த போதிலும், சபாநாயகர் இருக்கை முற்றுகையிடப்பட்டு அமளி நீடித்தது.

அப்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று அவையை சிறப்பாக நடத்த எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். அவையை கண்ணியமாக நடத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவைக்குள் கூச்சலிடுவதற்கு இடம் இல்லை, வேண்டுமென்றால் அவைக்கு வெளியே சென்று கூச்சலிடுங்கள் என்றும் அவர் கடிந்து கொண்டார்.

கேள்வி நேரம் என்பதால் இப்போது விவாதங்கள் நடத்த முடியாது என தெரிவித்ததோடு, திட்டமிட்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்து அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்.

பின்னர் மக்களவை மீண்டும் கூடிய போது  எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வழங்கியிருந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் மக்களவையில் கடும் அமளி நிலவியது. சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கோஷம் எழுப்பினர். கடும் அமளிக்கு இடையே மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவராக பணியை தொடங்கும் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை மனதார வாழ்த்துவதாக கூறினார். அவை உறுப்பினர்கள் சார்பிலும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், எளிய பின்புலத்தில் இருந்து துணை குடியரசுத் தலைவராக உயர்ந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் உயர்வு, ஜனநாயகத்தின் பலத்தை எடுத்துரைப்பதாகவும் கூறினார்.  மேலும், தேசத்துக்கு உழைப்பதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் எனவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

இதனைத் தொடர்ந்து சி.பி ராதாகிருஷ்ணனை வரவேற்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார். அப்போது முந்தைய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்தும், அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தாதது குறித்தும் பேசியதால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. எனினும், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Night
Day