எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் 2வது நாளாக எதிர்க் கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கிய நிலையில், முதல் நாளன்று எஸ்ஐஆர் பணிக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்னைக்காக மாநிலங்களவையில் எதிர்க் கட்ச எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், குளிர் கால கூட்டத் தொடரின் 2ம் நாளான இன்று மக்களவை கூடியதும், எஸ்ஐஆர் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க் கட்சி எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து மக்களவை நண்பகல் 12 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவை மீண்டும் கூடியதும் இதே நிலை நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணி வரையும் பின்னர் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

இதேபோல் எஸ்ஐஆர் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, எந்தப் பிரச்சினை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் கேட்டுக் கொண்ட அவர், விவாதங்களை அமைதியான மற்றும் ஒழுக்கமான முறையில் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். தேர்தல்களில் எப்போதும் வெற்றி தோல்வி இருக்கும் என்று கூறிய கிரண் ரிஜிஜு, தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட கோபத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவது சரியல்ல என்றும் கூறினார்.

முன்னதாக, வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது எஸ்ஐஆர் பணியை உடனடியாக நிறுத்தக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எம்பிக்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.

இதனிடையே, எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து மக்களவையில் வரும் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், வந்தே மாதரம் விவகாரம் குறித்து வரும் 8ஆம் தேதி விவாதம் நடைபெறவுள்ளது.


Night
Day