அஜித் கொலை வழக்கு - காவல்நிலைய ஆவணத்தில் முரண்பட்ட தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரின் இறப்பு குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களிலும், அரசு ராஜாஜி மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ள இறப்பு அறிக்கையிலும் முரண்பட்ட தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார், கடந்த 28ஆம் தேதி போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், மடப்புரம் கோவில் பின்புறத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது தப்பிச் செல்ல முயன்றதில் கீழே விழுந்ததாகவும், அப்போது வலிப்பு ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கும், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அஜித்குமார் அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கு இரவு சுமார் 11.15 மணியளவில் மருத்துவர் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ள இறப்பு அறிக்கையில், அஜித்குமார் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு விதமான தகவல்களால் அஜித்குமாரின் குடும்பத்தினர் சட்டபூர்வமாக இறப்புச் சான்றிதழ் பெற முடியாமல் உள்ளாகியுள்ளனர்.

Night
Day