எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட தனியார் வங்கி ஊழியரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவருக்கு கடந்த ஜனவரி மாதம் செல்போனில் அழைத்த ஒருவர், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் என்றும், தைவான் நாட்டிற்கு போதை மருந்துகள் கடத்தியதாக புகார் வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டுமென்றால் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய செவிலியர் வங்கி கணக்கில் இருந்து 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து தான் தாம் ஏமாற்றபட்டதை அறிந்த செவிலியர், இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பொந்து சங்கரராவ் என்பவரது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மூளையாக செயல்பட்டு, தலைமறைவாக உள்ள வங்கி மேலாளர் ஹிர்திக்கை தேடி வருகின்றனர்.