எழுத்தின் அளவு: அ+ அ- அ
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே காவல் ஆய்வாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக போலீசாரால் தேடப்பட்டு வருபவரின் தாயார் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் பகுதியைச் சேர்ந்த வாஞ்சிநாதன் மீது ஒரகடம் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அண்மையில், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை காரில் கடத்திச் சென்று கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த வாஞ்சிநாதன் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் வல்லத்தில் உள்ள வாஞ்சிநாதனின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவலர்கள் 5 பேர் வாஞ்சிநாதன் குறித்து அவரது தாய் சல்சாவிடம் விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு எதுவும் தெரியாது என்று தாய் சல்சா தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த காவல் ஆய்வாளர் வெங்கடேசன், வாஞ்சிநாதனின் தயா் சல்சா மீது கண்மூடித்தனமாக கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. லத்திடியால் அடித்து, கழுத்தைப் பிடித்து கொல்ல முயற்சித்ததாக சல்சா வெளியிட்டுள்ள வீடியோ வேகமாக பரவி வருகிறது.
இதனிடையே, இதுகுறித்து விளக்கம் அளித்த ஒரகடம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், வாஞ்சிநாதன் குறித்து விசாரணை மட்டுமே நடத்தியதாகவும், அவருடைய தாயார் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும், கொலை முயற்சி வழக்கை திசை திருப்புவதற்காக இது போன்று வீடியோவை வெளியிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.