எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக்கொலை செய்த சம்பவம் குறித்த அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
குருகிராமில் உள்ள சுஷாந்த லோக் பேஸ் 2 பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்த அவர், இரட்டையர் பிரிவில் மாநில அளவில் 113வது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனை ராதிகாவை, அவரது தந்தையே சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது தந்தை தீபக் யாதவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ், டென்னிஸ் அகாடமி ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மகளின் சம்பாத்தியத்தில் வாழ்வதாக தந்தை தீபக் யாதவை சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தீபக் யாதவ் மகளிடம் அகாடமியை மூடச்சொல்லி வற்புறுத்திய நிலையில், அதற்கு ராதிகா மறுத்ததாகவும் தெரிகிறது.
சம்பவத்தன்று காலை 10 மணியளவில், சமையலறையில் இருந்த ராதிகா, வீட்டில் உள்ள அனைவருக்கும் உணவு சமைத்துக் கொண்டு இருந்த போது, அங்கு வந்த தந்தை தீபக், ராதிகாவிடம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதை நிறுத்த சொன்னதாக கூறப்படுகிறது. அதற்கும் மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த தந்தை தீபக், தனது துப்பாக்கியை எடுத்து, ராதிகாவின் முதுகில் 3 முறை சுட்டுள்ளார். இதில் காயமடைந்த ராதிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டென்னிஸ் வீராங்கனையை பெற்ற தந்தையே சுட்டுக்கொலை செய்திருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.