உயிர் பலி வாங்கிய பரோட்டா... என்ன சொல்கின்றனர் மருத்துவர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பரோட்டா சாப்பிட்ட நபர், திடீரென மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் விரும்பும் உணவான பரோட்டாவை சாப்பிடுவதால் உயிரிழப்புகள் ஏற்படுமா? பரோட்டா உணவால் என்ன மாதிரியான தீமைகள் உண்டாகும் என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்... 

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பரோட்டாதான். தூத்துக்குடி பொறிச்ச பரோட்டா, விருதுநகர் எண்ணெய் பரோட்டா, மதுரை பன் பரோட்டா என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையிலான பரோட்டோ புகழ்பெற்றதாக உள்ளது. இந்த அனைத்து வகை பரோட்டக்களும் சென்னையில் கிடைப்பதுதான் சிறப்பு.. 

பரோட்டா உணவில் உள்ள தீமைகளை பற்றி எத்தனையோ மருத்துவர்கள் கூறினாலும் தமிழகம் முழுவதும் பரோட்டா விற்பனை அதிகரித்து கொண்டுதான் உள்ளது. சாலையோர கடைகள் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்கள் வரை பரோட்டா இல்லாத உணவகங்களே இல்லை எனலாம். இந்த பரோட்டாக்களை சாப்பிட்டு சிலர் உயிரிழந்த செய்திகளையும் நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பரோட்டா சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆவடியை அடுத்த பாலவேடு கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இவரது மனைவி மஞ்சி என்பவர் அருகில் உணவகத்தில் இரவு சாப்பிடுவதற்கு பரோட்டா வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதனைதொடர்ந்து, பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேலு, அருகில் இருந்த உணவகம் ஒன்றில் பரோட்டா வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்த வேலுவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார் வேலு. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு வேலுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த வேலுவுக்கு இதற்கு முன்பு ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பரோட்டா சாப்பிட்டபோது அவர் மயக்கம் அடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய இதயவியல் நிபுணர் மருத்துவர் சுரேந்திரன், இரவு நேரங்களில் துரித உணவுகள், பரோட்டா போன்ற கடினமான உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும், எளிதில் செறிக்க கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறிய மருத்துவர், கார்போஹைடரேட் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்வதால் உடம்பில் கொழுப்பு அதிகரிப்பதாகவும், மாதத்தில் ஒரு முறை உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவர்கள் கூறுவது போல் உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள், பரோட்டா உள்ளிட்ட உணவுகளை தவிர்ப்பதே அனைவருக்கும் நல்லது...

Night
Day