சதுப்புநிலங்களை தாரைவார்த்தல் சென்னை வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் - பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

பள்ளிக்கரணையில் 50 சதுர கிலோமீட்டராக இருந்த சதுப்பு நிலம் கடந்த 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு 10 சதுர கிலோ மீட்டராக குறைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் இருந்து பெரும்பாக்கம் வரையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவி கிடக்கிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் இனப்பெருக்கம் செய்வதற்காக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த சதுப்பு நிலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடில் குடியிருப்புகள் கட்ட தமிழக அரசு அனுமதித்துள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பள்ளிக்கரணையில் சதுப்பு நிலம் அழிக்கப்படுவதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பல வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சதுப்பு நிலங்களில் கட்டுமான பணி மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கம் குறித்தும், அதனை பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும் நமது ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு பேரிடர் மேலாண்மை நிபுணர் முத்துகிருஷ்ணன் அளித்த சிறப்பு நேர்காணலில் பள்ளிக்கரணை என்பது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ளத்தடுப்பு அரணாக அமைந்துள்ளதாகவும், சதுப்பு நிலம் குறைந்தால் இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சதுப்பு நிலங்களில் இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் உயிரிழக்கும் நிலை இருப்பதாக அறப்போர் இயக்கம் வேதனை தெரிவித்துள்ளது. ராம்சார் நிலங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எதன் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது என்றும் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. சிஎம்டிஏ, சியா, எஸ்சிஎஸ்சி, வனத்துறை போன்றவை தெளிவாக திட்டமிட்டு அனுமதி வழங்கியுள்ள விவகாரத்தில் பல நூறு கோடி ரூபாய் கைமாறியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ராம்சார் நிலத்தில் கட்டுமானம் நடைபெறுவது தெரிந்தும் தமிழக அரசு அதை ஏன் தடைசெய்யவில்லை என்றும் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

varient
Night
Day