எழுத்தின் அளவு: அ+ அ- அ
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தலைவலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு சக்கரை நோய்க்கான 100 மாத்திரை வழங்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதில் மருத்துவர்களின் அலட்சியபோக்கு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விழுப்புரம் மருத்துவமனையில் கால் மாற்றி அறுவை சிகிக்சை செய்து பாதிக்கப்பட்டது போன்ற பல சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருவது மக்களை பீதியடைய செய்துள்ளது. ஏழை எளிய மக்களின் நலனுக்கான அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது சாமானியர்கள் தான்.
அந்தவகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலைவலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு சர்க்கரை நோய்க்கான மாத்திரை வழங்கிய சம்பவம் நடந்துள்ளது. போச்சம்பள்ளியை அடுத்த பொடார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகலா. இவர் குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பணிக்கு சென்ற விஜயகலாவுக்கு திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. தலைவலியால் கடுமையாக பாதிக்கப்பட்ட விஜயகலா அருகீல் உள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு புறநோயாளி பிரிவில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு மருத்துவரை பார்க்க சென்றுள்ளார். அங்கு அவருரை பரிசோதித்து வேறு மருத்துவரிடம் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர் விஜயகலாவை வைத்து பயிற்சி மருத்துவர்களுக்கு வகுப்பு நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே தலைவலியால் அவதிப்பட்டிருந்த விஜயகலாவை வைத்து தொண்டை, மூக்கு என மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி விட்டு, பின்னர் ஊசி செலுத்தி விட்டு ஸ்கேன் செய்ய மருத்துவர்கள் கூறியுள்ளனர். விஜயகலாவிடம் பணம் இல்லாததால் இன்னொரு நாள் ஸ்கேன் செய்து கொள்கிறேன், தற்போது தலைவலிக்கான மாத்திரை கொடுங்கள் என்று கூறியுள்ளார். மருத்துவர் ஊசி செலுத்திவிட்டு நோயாளிக்கான மாத்திரைகளை கணினியில் வாயிலாக மருந்து சீட்டு வழங்கி மாத்திரைகளை மருந்தகத்தில் வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து விஜயகலா மாத்திரை வாங்குவதற்காக மருத்துவமனை மருத்தகத்திற்கு சென்று ஓபி சீட்டை கொடுத்த போது அவருக்கு சில மாத்திரைகளை வழங்கி அத்துடன் 3 கவரில் 100 மாத்திரைகளை கொடுத்துள்ளார். 100 மாத்திரைகள் கொடுத்ததால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது மருத்துவர் 102 அறையில் உள்ள மருத்துவரை பாருங்கள் எனவும் அங்கு சென்ற போது அங்குள்ள மருத்துவர் 202- ல் உள்ள மருத்துவரை பாருங்கள் என அலைகழித்து வந்துள்ளனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வியஜகலா பின்னர் ஒரு வழியாக சிகிச்சை அளித்த மருத்துவரை பார்த்து கேட்டப்போது மருத்துவர் அலட்சியமாக தலைவலிக்கு பதிலாக தெரியமால் சக்கரை நோய் மாத்திரைகளை நம்பர் மாற்றி கொடுத்து விட்டதாக அலட்சியமாக கூறியுள்ளனர். மேலும் கூட்டமாக இருக்கும் போது அனைவரையும் முகம் பார்த்து சிகிச்சை அளிக்க முடியுமா? ஒன்றும் ஆகாது செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
மருத்துவரின் இந்த அலட்சிய செயலால் அதிர்ச்சியடைந்த விஜயகலா மீண்டும் சென்று மருந்தகத்தில் மாத்திரைகளை கேட்டப்போது உங்களுக்கு மாத்திரைகள் வழங்க வில்லை என மருத்தாளுனர்கள் கூறியுள்ளனர். இதனால் மேலும் பெரு அதிர்ச்சியடைந்துள்ளார் விஜயகலா. எதற்கு இவ்வளவு மாத்திரைகள் என கேட்கபோய் உண்மை தெரிந்ததால் தான் தப்பித்தாக கூறும் விஜயகலா, ஒன்றும் தெரியாமல் வரும் ஏழைகளுக்கு மருத்துவர்கள் இது போன்ற அலட்சிய சிகிச்சையால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் விஜயகலா.
தலைவலிக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணை வைத்து பயிற்சி மருத்துவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு எதற்கு ஊசி போட்டோம் என்றுகூட தெரியாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர் மருத்துவர்கள். பணியில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக செயல்படும் மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.