எழுத்தின் அளவு: அ+ அ- அ
மத்தியப்பிரதம், ராஜஸ்தான் மாநிலங்களில் cold rif இருமல் மருந்து குடித்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த வழக்கில் அம்மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் மருந்து நிறுவனத்தில் cold rif என்ற குழந்தைகளுக்கான இருமல் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் சிந்துவாரா மாவட்டம் பராசியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருமல் மருந்தை குடித்த 11 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து மேலும் சில குழந்தைகள் உயிரிழந்த நிலையில் cold rif இருமல் மருந்தால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை மத்திய பிரதேசத்தில் மட்டும் 19 ஆக உயர்ந்தது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஒரு குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மத்திய பிரதேச போலீசார் சென்னை வந்து தமிழக போலீசார் உதவியுடன் மருந்து நிறுவன உரிமையாளரான ரங்கநாதனை கோடம்பாக்கத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் மருந்து நிறுவனம் செயல்படும் சுங்குவார்சத்திரத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதனிடையே Coldrif இருமல் மருந்தில் நச்சுப் பொருள் கலந்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. Coldrif மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு Coldrif மருந்தை பரிசோதனை செய்ததில் டையெத்திலீன் கிளைக்கால் என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருந்து உற்பத்தி உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் தெரிவித்துள்ள மருந்து கட்டுப்பாட்டு துறை, தயாரிப்பு நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.