ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - முதல் குற்றவாளி நாகேந்திரன் மரணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளியான வடசென்னை தாதா நாகேந்திரன் உடல்நலக்குறைவால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலை தொடர்பாக ஏ1 குற்றவாளியான வடசென்னை தாதா நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்து கொண்டே அடிதடி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் ஆயுள் தண்டனை கைதியான ரவுடி நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் சிறையில் இருந்தபடி அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்தார்.

இந்நிலையில் ரவுடி நாகேந்திரன் வீட்டுக்கு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நாகேந்திரன் வீடு அமைந்துள்ள சென்னை வியாசர்பாடி முல்லை நகர் அருகே புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை ஆணையாளர் முத்துக்குமார்  தலைமையில்  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரவுடி நாகேந்திரன் பிரபலமான ரவுடி என்பதால் அவருடைய ஆதரவாளர்கள் அதிகம் வருவார்கள் என்பதாலும்  அப்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஏதேனும் குற்ற செயல்கள் நடைபெற்றால் அதனை தடுத்து நிறுத்தவும்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Night
Day