விழுப்புரத்தில் விசிக வேட்பாளருக்கு எதிர்ப்பு... திமுகவினரின் வாகனத்தை மறித்த உடன்பிறப்புகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக எம்.எல்.ஏ-வின் பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி திமுகவினரே ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எதனால் பிரசாரம் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது, காரணம் குறித்து சற்று விரிவாக காணலாம்...

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவருக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ மணிக்கண்ணன் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் திமுக எம்.எல்.ஏ மணிக்கண்ணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெரியசெவலை கிராமத்தில் திமுகவினரே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ-வின் பிரசார வாகனத்தை கிராமத்திற்கு வெளியே தடுத்து நிறுத்திய அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர், நாங்கள் உங்களுக்குதான் வாக்களித்தோம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அல்ல என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக~வாக்கு கேட்டு தங்கள் கிராமத்திற்குள்~நுழைய கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரை, கட்சிக்கும், கூட்டணிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டாம் என கூறி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் சமாதனம் செய்தார்.

இருப்பினும் எம்.எல்.ஏ. மணிக்கண்ணனின் சமாதானத்தை பொருட்படுத்தாத திமுகவினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து தள்ளி அப்புறப்படுத்தினர். 

பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த திமுகவினருக்கும் இடையே வெகு நாட்களாக மோதல் போக்கு நிலவி வருவதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யகூடாது என திமுக எம்.எல்.ஏ-வை, உடன்பிறப்புகளே முற்றுகையிட்டு வாக்கவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Night
Day