வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மிக கனமழையும், நெல்லை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 2ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிகடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் எனவே பலத்த காற்று வீசவாய்புள்ள பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Night
Day