மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றலா மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 4வது நாளாக இன்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுருளி அருவியில் மூன்றாவது நாளாக குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு சீராகும் வரை இந்த தடை நீடிக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடைவிதித்துள்ளது. அருவியில் நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Night
Day