எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
திருப்புவனம் அடுத்த மடப்புரத்தை சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசால் முதலில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் கண்டனத்திற்குப்பிறகு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் பிஎன்எஸ்., சட்டப்பிரிவு 103ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டி.எஸ்.பி., மோகித்குமார் தலைமையிலான குழுவினர், மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷின் விசாரணை அறிக்கையை பெற்று, விரிவான விசாரணை நடத்தி அடுத்த மாதம் 20ம் தேதி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.