எழுத்தின் அளவு: அ+ அ- அ
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினருடன் திரும்பிய டிராகன் விண்கலம் பூமியை வந்தடைந்தது.
அமெரிக்காவின் 'ஆக்சியம் ஸ்பேஸ்' தனியார் விண்வெளி நிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஆக்சியம் 4 திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படை வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் கடந்த மாதம் 25 ஆம் தேதி டிராகன் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றனர். சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரும் விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். 433 மணி நேரம் விண்வெளி நிலையத்தில் இருந்து மேற்கொண்ட ஆய்வின் போது நான்கு பேரும் பூமியை 288 முறை சுற்றி வந்தனர். மேலும் விண்வெளியில் சுமார் 122 புள்ளி 31 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் 18 நாட்கள் ஆய்வுக்குப் பின் நான்கு பேரும் நேற்று மாலை 4.45 மணிக்கு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் பயணத்தைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சுபான்சு சுக்லா உள்ளிட்ட நான்கு பேருடன் பூமியை நோக்கி வந்த டிராகன் விண்கலம் பிற்பகல் 2.55 மணியளவில் வளிமண்டலத்தை அடைந்தது. இதையடுத்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா அருகில் பசிபிக் கடலில் பிற்பகல் 3.01 மணிக்கு விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதனையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீட்புக் கப்பல் டிராகன் விண்கலத்தை மீட்டனர். இதனைத் தொடர்ந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரும் மகிழ்ச்சியில் கையசைத்தவாறு விண்கலத்தில் இருந்து வெளியே வந்தனர். நான்கு பேரையும் ஆக்சியம் 4 திட்டக் குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
இதனிடையே சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை வந்தடைந்த காட்சியை பார்த்து அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சுபான்சு சுக்லா படித்த பள்ளியில் இருந்து டிராகன் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா வெளியே வருவதைப் பார்த்த அவரது தாயார் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.