ஜப்பான் பிரதமருடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

4 நாள் அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியாவிற்கு சென்றார். விமான நிலையத்தில் ஜப்பான் உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண்கள், காயத்ரி மந்திரம் மற்றும் பிற மந்திரங்களை ஜெபித்து பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர். அவர்களுடன் இணைந்து பிரதமர் மோடியும் கைகூப்பி மந்திரங்களை சொன்னார். பின்னர் டோக்கியாவில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்த மோடிக்கு இந்திய வம்சாவளியினர் கரகோஷம் மற்றும் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பியும் உற்சாக வரவேற்றனர்.

தொடர்ந்து டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா - ஜப்பான் பொருளதார மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகம் இந்தியாவை வெறுமனே பார்க்கவில்லை, உற்று நோக்குகிறது என்று தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் ஜப்பான் எப்போதுமே முக்கிய பங்காளியாக இருந்து வருவதாக தெரிவித்த அவர், உற்பத்தி, தொழில்நுட்பம், பசுமை, எரிசக்தி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஜப்பான் ஆதரவாக இருந்து வருவதாகவும் கூறினார். ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும்,  இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது, மிக விரைவில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதையடுத்து ஜப்பான் முன்னாள் பிரதமர்கள் யோஷிஹிடே சுகா மற்றும் புமியோ கிஷிடா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா முன்னிலையில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Night
Day