எழுத்தின் அளவு: அ+ அ- அ
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் இந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுவதால், தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 3ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும் 1ஆம் தேதி வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் ஆகவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.