புரட்சித்தலைவி அம்மாவின் 76வது பிறந்தநாள் : திருவுருவப் படத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்‍கள் மனதில் நீங்காத இடம்பெற்றிருக்‍கும், புரட்சித்தலைவி அம்மாவின் 76 வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள, புரட்சித்தலைவி அம்மாவின் பெயர் தாங்கிய புதிய இல்லமான, 'ஜெயலலிதா' இல்லத்தில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெருந்திரளான கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்‍கள் கலந்துகொண்டு புரட்சித்தலைவி அம்மாவுக்‍கு மரியாதை செலுத்தினார்கள்.

'மக்‍களால் நான், மக்‍களுக்‍காகவே நான்' என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக்‍ கொண்டு, தமிழக மக்‍கள் நலனுக்‍காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு உழைத்து, காலத்தால் அழியாத புகழோடு, மக்‍கள் மனதில் நீங்காத இடம்பெற்றிருக்‍கும், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு, காலையில் இருந்தே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான கழகத் தொண்டர்கள் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் திரண்ட வண்ணம் இருந்தனர். 

'புரட்சித்தலைவி அம்மாவின் புகழ் வாழ்க, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க' என்ற வாழ்த்து முழக்‍கங்களுடன் கழகத் தொண்டர்களும் பொதுமக்‍களும் திரண்டிருந்தனர். தொண்டர்களின் வாழ்த்து முழக்‍கங்களுக்‍கிடையே போயஸ் கார்டனில், புரட்சித் தலைவி அம்மாவின் பெயர் தாங்கிய ஜெயலலிதா இல்லத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பூங்கொத்துகள் வழங்கியும் பொன்னாடைகள் அணிவித்தும் புரட்சித்தாய் சின்னம்மாவை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அலங்கரித்து வைக்‍கப்பட்டுள்ள, புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். பெருமளவில் திரண்டிருந்த கழகத் தொண்டர்களுக்‍கும் பொதுமக்‍களுக்‍கும் புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து, கழகத் தொண்டர்களை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

திமுக அரசின் அலட்சியத்தால் விழுப்புரம் அருகே உயரழுத்த மின்சாரக் கம்பி உரசியதால் நிகழ்ந்த விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இளைஞர் பூபாலன், தானே சுய தொழில் செய்து வருமானம் ஈட்டிக்‍கொள்ள ஏதுவாக, இளைஞர் பூபாலன் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அவருக்‍கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கட்டுமானப் பணிகளுக்கு உதவும் இயந்திரங்களையும் வழங்கியுள்ளார். இளைஞர் பூபாலனுக்‍கும் அவரது தாயாருக்‍கும் ஆறுதல் தெரிவித்த புரட்சித்தாய் சின்னம்மா, பூபாலனுக்‍கு செயற்கைக்‍கால்கள் பொருத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் உறுதி அளித்தார். இளைஞர் பூபாலனும், அவரது தாயாரும் இதற்காக, புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். 

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, தமிழ்நாடு ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் கணேசன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டனர். 

இதனைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பெருமளவில் திரண்டிருந்த கழகத் தொண்டர்கள், பொதுமக்‍கள் உள்ளிட்ட அனைவருக்‍கும் புரட்சித்தாய் சின்னம்மா, அறுசுவை உணவு வழங்கினார்.

Night
Day