தஞ்சாவூரில் ஓயாத ஊர் பிரச்சனை... மோதிக் கொள்ளும் இளைஞர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை அருகே இரு கிராம இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றி காவல்நிலையம் வரை பஞ்சாயத்து வந்துள்ளது. இளைஞர்களிடையே வாய் தகராறு ஏற்பட காரணம்.. இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து சற்று விரிவாக காணலாம்...

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே மருத்துவகுடி, நாகக்குடி, என இரு கிராமங்கள் உள்ளது. பல்வேறு சமூகத்தினர் வசித்து வரும் இந்த கிராமங்களில், இருதரப்பினரிடையே அவ்வப்போது மோதல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், சுவாமிமலை அருகே நாகக்குடி மற்றும் மருத்துவக்குடி கிராம இளைஞர்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு மருத்துவக் குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நாகக்குடி கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் மீது மோதியாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த நாகக்குடி கிராமத்தை சேர்ந்த நபர்கள், மருத்துவக்குடி கிராமத்தை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இருதரப்பிலும் இருந்து தலா ஒருவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

இந்தநிலையில் தகராறில் ஈடுபட்ட மருத்துவக்குடி கிராமத்தை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகக்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாரை சாரையாக திரண்டு வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர், தகராறில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். 

இரு கிராம இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றி காவல்நிலையம் வரை பஞ்சாயத்து வந்துள்ள சம்பவத்தால் இரு கிராமங்களுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க இருகிராமங்களிலும், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day