எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேலூர் அருகே அமைச்சர் துரைமுருகனின் உறவினர் வீட்டின் மொட்டை மாடி மற்றும் பீரோக்களில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவை வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்ட பணமா என கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் , திமுக நிர்வாகிகள், அவர்களுக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வேலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் அமைச்சர் துரைமுருகனின் உறவினர் வீட்டில் 7 லட்சம் ரூபாயை கைப்பற்றி உள்ளனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். 76 வயதான இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். அமைச்சர் துரைமுருகனின் உறவினரான இவரது வீட்டில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உடனடியாக காங்க்குப்பம் விரைந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நடராஜன் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் உதவியோடு அதிரடியாக சோதனை நடத்தினர். புதர் போல் காணப்பட்ட வீட்டின் சுற்றுப்புறங்களிலும், அதிகாரிகள் டார்ச் லைட் அடித்து ஆய்வு நடத்தினர்.
வீட்டின் உள்ளே இரண்டு பீரோக்கள் இருந்த நிலையில், ஒரு பீரோவிற்கு சாவி இல்லாததால் அதிகாரிகள் அதனை உடைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பீரோவில் நான்கரை லட்சம் ரூபாய் பணம் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து வீட்டில் உள்ள அனைத்து இடங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தபோது வீட்டின் மொட்டை மாடியில் இரண்டரை லட்சம் ரூபாயும் கேட்பாரற்று கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்ற பணத்தை அதிகாரிகள் ஒன்றாக வைத்து எண்ண முயற்சித்த போது, அதில் குறிப்பிட்ட தொகை தனது என்றும், மற்ற பணம் தனது கணவரது என்றும் எனவே அதனை தனது பணத்துடன் கலக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளிடம் நடராஜனின் மனைவி கோபப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை தனியாக வைத்து எண்ணி பார்த்தனர்.
மேலும், அமைச்சர் துரைமுருகனுக்கும் தங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லை எனத் தெரிவித்த அந்த பெண், தனது தாலி மீது சத்தியம் செய்து இதுதான் உண்மை என்றும் இந்த பணம் தன்னுடையது என்றும் கூறினார். தனது தாய் கொடுத்த பணத்தை சேர்த்து வைத்துள்ளதாகவும், கணவரின் பணத்திற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மொட்டை மாடியில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து நடராஜனிடம் கேட்டபோது, சரியாக பதில் அளிக்காமல் திணறினார். அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கேட்டபோதும், அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை, ஒரு கட்டத்தில் கோபமடைந்த அதிகாரிகள் அந்த பணம் உங்களுடையதாக இல்லையா என்பதை கூறுங்கள் என குரலை சற்று உயர்த்தி கேட்டபோது, இல்லை என கூறினார். மேலும், அந்த பணம் எப்படி வந்தது என தெரியாது எனத் தெரிவித்தார்.
இதனை அடுத்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பீரோவில் இருந்த நான்கரை லட்சம் ரூபாய் மற்றும் மொட்டைமாடியில் கேட்பாரற்று கிடந்த இரண்டரை லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து கே.வி குப்பம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
அமைச்சர் துரைமுருகனின் சொந்த கிராமமான காங்குப்பத்தில் அவரது உறவினர் வீட்டில் 7லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்ட சம்பவம் திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.