கேட் கீப்பரின் அலட்சியத்தால் விபத்து - அம்பலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் கேட்டை திறக்கச் சொன்னதாக கேட் கீப்பர் பொய்யான தகவல் கூறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அக்கா தம்பி உள்பட 3 மாணாக்கர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர் கேட்டை திறக்க சொன்னதால் திறந்து விட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா தெரிவித்தார். 

இதுதொடர்பாக திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் முதுநிலை பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் முன்னிலையில் கடந்த 10ம் தேதி 11 பேரிடம் விசாரணை நடைபெற்றது. விபத்து தொடர்பாக 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டநிலையில், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங் உள்ளிட்ட 11 பேர் நேரில் ஆஜரானநிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

ரயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட் கீப்பர் கூறி இருந்தார். இந்தநிலையில், 'கேட்டை மூடவில்லை' என்று கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா ஒப்புக் கொண்டுள்ளார். ஸ்டேஷன் மாஸ்டரிடம் பேசியது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா கேட்டை திறந்தே வைத்திருந்தது உறுதியாகி உள்ளது.

இதனிடையே, 11 பேரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் மற்றும் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ஆகிய இருவரிடம் இன்னும் விசாரணை நடைபெறவில்லை.  அவர்களிடமும் உரிய விளக்கம் கேட்கப்பட்ட பின் ரயில்வே துறை சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மகேஷ்குமார் தெரிவித்தார்.

Night
Day