எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் மீதான 11 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி தனித்தனியாக அளித்த தண்டனை விவரம் குறித்து பார்க்கலாம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் மீது பதிவான 11 வழக்குகளிலும் குற்றம் ஆதாரங்களுடன் நீரூபிக்கப்பட்டதால் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தவிட்டதுடன், சிறையில் எந்தவித சலுகைகள் வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.
நீதிபதி அளித்த தண்டனை விவரத்தில், விருப்பத்துக்கு மாறாக அத்துமீறியதற்காக 3 ஆண்டுகளும், மாணவியை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதற்காக 1 மாதமும் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்த குற்றச்சாட்டில் 1 ஆண்டும், 10 ஆயிரம் ரூபாயும் விதிக்கப்பட்டுள்ளது. உடலில் காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 1 ஆண்டும், விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 3 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மாணவியை கடுமையாக தாக்கியதற்கும், கொலை மிரட்டல் விடுத்ததற்கும் தலா 7 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்ததற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அந்தரங்க உரிமைகளை மீறியதற்காக 3 ஆண்டுகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி 3 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.