லஞ்சம் தர மறுத்த சிறு வியாபாரி கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் அராஜகம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அம்பத்தூர் அருகே லஞ்சப்பணம் கொடுக்காததால் எசன்ஸ் பொருள் விற்பனைக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்...

சென்னை அம்பத்தூர் அருகே முகப்பேர் கிழக்கு பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பாபு சிங் என்பவர் பிளாஸ்டிக்ஸ் எசன்ஸ் பொருள் விற்பனை கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 9-ம் தேதி இவரது கடைக்கு சீருடையில் சென்ற மாசுக் கட்டுப்பாடு வாரிய ஊழியர்கள் மூன்று பேர், பாபு சிங்கிடம் மூவாயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். ஆனால், பணம் கொடுக்க முடியாது என பாபு சிங் கூறியதால், அவரது கடையை செல்போனில் புகைப்படம் எடுத்துவிட்டு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் மூன்று பேரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். 

இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஆர்.கே.பிளாஸ்டிக் கடைக்குச் சென்ற சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சிலர், தொடர்ந்து உரிமையாளர் பாபு சிங்கிடம் கறாராக கேள்வி கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் கடைக்கு வெளியே இருந்த பொருட்களை கடைக்குள்ளே வைத்த மாநகராட்சி ஊழியர்கள், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததாக கூறி, பாபு சிங்கின் கடைக்கு பொறுப்புடன் சீல் வைத்து கடமையாற்றினர். 

இதனால் செய்வதறியாது திகைத்த பாபு சிங், தனது தொழில் பாதிப்படைவதால் சீல் வைத்த கடையை திறக்குமாறு, பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் மனு ஒன்றையும் அளித்துள்ளார். 

மாசுக் கட்டுப்பாடு வாரிய ஊழியர்கள் சிலர் வந்து பணம் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததாலேயே அடுத்த நாள் தனது கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் பாபு சிங் வேதனையுடன் தெரிவித்தார். 

வியாபாரி பாபு சிங்கிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த மாசுக் கட்டுப்பாடு வாரிய ஊழியர்கள் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Night
Day