எழுத்தின் அளவு: அ+ அ- அ
தனது தாயை மட்டுமல்ல ஒட்டுமொத்த தாய்மார்களையும் சகோதரிகளையும் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் அவமதித்துள்ளது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் உள்ள பெண் தொழில் முனைவோருக்கு எளிதாக நிதி வழங்குவதற்காக பீகார் ராஜ்ய ஜீவிகா நிதி சாக் சஹாரி சங்க லிமிடெட்டை டெல்லியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார். பின்னர் 20 லட்சம் பயனாளிகளிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த திட்டத்தின் மூலம் பீகாரில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சகோதரிகளுக்கு எளிதாக நிதி உதவி கிடைக்கும் என்றும் இது அவர்கள் செய்யும் பணியையும் அவர்கள் செயல்படும் தொழிலையும் மேலும் மேம்படுத்த பெரிதும் உதவும் என்றும் கூறினார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க, அவர்களின் வாழ்க்கையிலிருந்து அனைத்து வகையான சிரமங்களும் அகற்றப்படுவது அவசியம் என்று கூறிய பிரதமர் மோடி, அதனால்தான் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் வாழ்க்கையை எளிதாக்க தேசிய ஜனநாயக கூட்டணி பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
தாய் தான் எங்கள் உலகம், தாய் எங்கள் சுயமரியாதை என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாரம்பரியம் நிறைந்த பீகாரில் சில நாட்களுக்கு முன்பு நடந்ததை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்று பிரதமர் கூறினார். பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினரால் தனது தாயார் அவமதிக்கப்பட்டதாக அவர் வேதனை தெரிவித்தார். இந்த அவமரியாதை தனது தாயாருக்கு மட்டுமின்றி, நாட்டிலுள்ள அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்றும், இதைக் கேட்ட பிறகு நீங்களும் தன்னைப் போலவே வேதனைப்படுகிறீர்கள் என்பது தமக்குத் தெரியும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.