கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரெளதி முர்மு, அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தார். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். இதையடுத்து, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டனர்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என புகழாரம் சூட்டினார். உலகளவில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும், அதன் வளர்ச்சியில் வங்கித் துறை முக்கிய பங்காற்றுகிறது என்றும் அவர் கூறினார். 

தொழில் துறைக்கு வங்கிகள் கடன் வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதாக குறிப்பிட்ட அவர், விவசாயிகளும், கிராமப்புற பொருளாதாரமும் வங்கித் துறையின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். காலமுறை மற்றும் மலிவு விலையிலான கடன்கள் வழங்குதல், நிதி கல்வி ஏற்படுத்துதல், வேளாண் தொழில்நுட்ப முன்முயற்சிகளை ஆதரித்தல் ஆகிய வழிகளில், விவசாயத்தை நீடித்த லாபகரமான தொழிலாக மாற்ற வங்கிகள் உதவ முடியும் எனவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் திரௌபதி முர்மு, நாளை காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்லும் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளவுள்ளார். சாமி தரிசனத்திற்கு பின் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


varient
Night
Day