முன்னாள் அமைச்சரின் பி.ஏ. மருமகன் வீட்டில் அள்ள அள்ள பணம்...! திகைத்த ஐடி அதிகாரிகள்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாஜக முன்னாள் அமைச்சரின் உதவியாளருடைய மருமகன் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் 175 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கோடி கணக்கில் பணமும் கிலோ கணக்கில் நகைகளும் கைப்பற்றப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட,  ஜலகண்டேஸ்வரர் நகரில் வசித்து வருபவர் லோகேஷ் குமார், இவர் SABL ப்ளூ மெட்டல் என்ற பெயரில் கிரசர் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி லோகேஷ் குமார் பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி காரில் வந்த போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி 10 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, லோகேஷ் குமாரின் வீட்டில் ஞாயிற்று கிழமை அதிகாலை 3 மணி முதல் ஓசூர் வருமான வரித்துறை துணை ஆணையர் விஷ்ணு பிரசாத் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், 175 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

24 மணிநேரத்தையும் கடந்து சோதனை நடைபெற்று வருவதால், மேலும் பல முக்கிய அவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா, பொம்மை ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது, அந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும், தற்போதைய எம்எல்ஏவுமான  பைரதி பசவராஜ் என்பவரின் உதவியாளர் மஞ்சுநாத் என்பவரின் மருமகன் தான் லோகேஷ் குமார் என்பது தெரியவந்துள்ளது. 

தேர்தல் நேரத்தில் கிரசர் நிறுவனம் நடத்தி வருபவர் வீட்டில் கோடி கணக்கில் பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரித்துறையினரின் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

varient
Night
Day