சுனாமி போல் பொங்கி எழுந்த அலைகள்... அஞ்சி நடுங்கும் மக்கள்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு, கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் மீனவ கிராம மக்கள் படும் துயரம் குறித்து விரிவாக காணலாம்...

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடலோர பகுதிகளில் ஆனி மற்றும் ஆடி மாதங்களில்  வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் இரையுமன்துறை கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும், ராட்சத அலைகள் எழும்பி அலை தடுப்புச் சுவரைத் கடந்து, கடற்கரை ஓரமாக இருந்த வீடுகளுக்கு உள்ளேயும், கல்லறை தோட்டங்களுக்கு உள்ளேயும் கடல் நீர் புகுந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அந்த பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால், இரவு நேரங்களில் வீடுகளில் தங்க அச்சப்பட்டனர். இதனையடுத்து, முறையான அலை தடுப்புச் சுவர்களை அமைத்து இந்த பகுதியை பாதுகாப்பான பகுதியாக மாற்றி தர வலியுறுத்தி, மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதுகுறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு தீயணைப்பு துறையினர் அந்த பகுதிக்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததாதல் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

வருடந்தோறும் கடல் சீற்றத்தால் இரையுமன்துறை மக்கள் அச்சத்துடனேயே வசித்துவரும் நிலையில், கரையோரம் வசிக்கும் மீனவ மக்களின் நலனை கருத்திக்கொண்டு தூண்டில் வளைவுகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day