"இங்கே வந்து கேள்வி கேள்" - கேள்வி கேட்ட மக்களை மிரட்டிய திமுக எம்எல்ஏ...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அருகே வாக்குச் சேகரிக்கச் சென்ற திமுக எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் கேள்வி கேட்டவர்களை ஒருமையில் பேசிய எம்எல்ஏவின் அநாகரிக செயலை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஆவேசத்துடன் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்க, பொறுமை இழந்த திமுக எம்எல்ஏ, கேள்வி கேட்டவர்களை ஒருமையில் பேசிய காட்சிகள்தான் இவை...

மக்களவை தேர்தல் தேதி நெருங்க நெருங்க திமுகவினருக்கு தோல்வி பயமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதற்கு காரணம், வாக்சேகரிக்க செல்லும் இடம் எல்லாம் திமுக-வினரிடம் ஆளும் கட்சி என்றும் பாராமல் பொதுமக்கள் கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்து வருவதுதான்.. 

ஈரோட்டில் ஞாயிற்றுக் கிழமை வாக்கிங் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை வழிமறித்த சாலையோர பெண் வியாபாரி, தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சரமாரியான கேள்வியால் முதலமைச்சரை திணறடித்தார்.

இந்த சம்பவத்தின் பரபரப்பில் இருந்து திமுகவினர் மீள்வதற்குள் மற்றொரு சம்பவம் திருவள்ளூர் அருகிலுள்ள உளுந்தை கிராமத்தில் அரங்கேறி உள்ளது. 

திருவள்ளூர் மக்களவை தொகுதியில் போடியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுடன், திமுக எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் அந்த பகுதியில் வாக்கு சேகரித்தார். 

மிககுறைவாகவே சொற்ப அளவில் காணப்பட்ட கூட்டத்தின் மத்தியில் எம்எல்ஏ பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட அப்பகுதி மக்கள், எம்எல்ஏவாக இருந்து என்ன செய்தீர்கள், எதுவுமே செய்யாமால் எப்படி ஓட்டு கேட்டு வந்தீர்கள் என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த திமுக எம்எல்ஏ, இங்கே வந்து கேள்வி கேள், பதில் சொல்கிறேன் என்று ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தார். 

அதோடு நிற்காமல், சாலை போட்டுக் கொடுத்தோம், தெரு விளக்கு, டேங்க் அமைத்துக் கொடுத்தோம் என தேய்ந்த ரெக்கார்ட் போல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் திமுக எம்எல்ஏ. இருந்தாலும், மக்கள் விடுவதாக இல்லை. அடுத்தடுத்து கேள்விக் கணைகளை தொடுத்த வண்ணம் இருந்தனர். 

நிலைமையை சமாளிக்க, எம்எல்ஏவுடன் வந்திருந்த திமுக நிர்வாகிகள் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பார்த்தனர். அவர்களாலும் சமாளிக்க முடியவில்லை. 

இனிமேலும் இங்கிருந்தால் முதலுக்கே மோசம் என்பதை உணர்ந்த திமுக எம்எல்ஏ, மைக்கில் குரலை உயர்த்திப் பேசியவாறே அங்கிருந்து விறுவிறுவென எஸ்கேப் ஆனார். 

இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்க, எம்எல்ஏ உடன் நின்று கொண்டிருந்த காங்கிரஸ் வேட்பாளரோ என்ன செய்வதென்ற தெரியாமல் விழிபிதுங்கியபடி அமைதியாக  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பதற்றத்துடன் எம்எல்ஏ எஸ்கேப் ஆனதை பார்த்த மக்கள் நகைத்தபடி அங்கிருந்து கலைந்து சென்றனர். 

வாக்குசேகரிக்க வரும் திமுக வினரிடம் பொதுமக்கள் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களால் செய்வதறியாமல் திகைத்துப் போயிருக்கின்றனர் திமுக வினர்.  

Night
Day