முதியோர் உதவித்தொகையில் ரூ.27 லட்சம் மோசடி... விசாரணை வளையத்தில் தனி வட்டாட்சியர்கள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலவலகத்தில் முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தில் 27 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்த மோசடி தொடர்பாக தனி வட்டாட்சியர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்ப்போம்...

ஆதரவற்ற முதியவர்களுக்காக கடந்த 1962 ஆம் ஆண்டு முதியோர் உதவித்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இன்று வரை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேம், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அரங்கேறியுள்ள மோசடி மூலம் எழுந்துள்ளது...
 
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டத்திலும் தனி வட்டாட்சியர்களை நியமித்து முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மாதம் தோறும் ஆயிரத்து 200 ரூபாய் அரசு உதவி தொகையாக பயனாளர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.....  

இந்த நிலையில், தனி வட்டாட்சியரால் நியமிக்கப்பட்ட கணினி ஆப்ரேட்டர் அம்பேத் ராஜா என்பவர் கடந்த ஓராண்டில் மட்டும் முதியவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் இருந்து 27 லட்சம் ரூபாயை சுருட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

வழக்கமாக முதியோர் உதவித்தொகை தனி வட்டாட்சியர் மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர் பதவியில் உள்ள உதவியாளர் தான் மின்னணு பரிவர்த்தனை வாயிலாக, அரசு வழங்கும் பணத்தை கருவூலம் மூலம் அனுப்பி அதனை வங்கிகள் மூலம் சம்பந்தப்பட்ட பயனாளிக்கு வழங்க வேண்டும்...

ஆனால் புதுக்கோட்டை வட்டத்தில் நிலைமையே வேறு.. கடந்த 2023 ஆம் ஆண்டு பணியில் இருந்த தனி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தாங்கள் பார்க்க வேண்டிய பணப்பரிவர்த்தனை வேலைகளை தேனி மாவட்டத்தை சேர்ந்த அம்பேத் ராஜா என்ற கணினி ஆப்ரேட்டரை மாத சம்பளத்திற்கு அமர்த்தி, அவர் மூலம் அந்த பணியை மேற்கொண்டுள்ளனர். 

கடந்த ஒரு ஆண்டில் 2 தனி வட்டாட்சியர்கள் மாறிய நிலையில் தற்போது 3வது தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். வட்டாட்சியர்கள் மாறினாலும், கணினி ஆப்ரேட்டர் காட்டில் தொடர்ந்து பண மழை பெய்து வந்துள்ளது. 3 பேருக்கும் அம்பேத் ராஜாதான் கணினி ஆப்ரேட்டராக செயல்பட்டுள்ளார். இந்த மூன்று பேருமே அம்பேத் ராஜாவின் மோசடி செயல்களை கண்காணிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளதால், ஆதரவற்ற முதியவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையானது உரியவர்களுக்கு கிடைக்காமல் இருந்துள்ளது. 

இதற்கிடையே, புதுக்கோட்டை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மட்டும் முதியோர்களுக்கு பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை ஒரே வங்கி கணக்கிற்கு செல்வதை சென்னை அலுவலகத்தில் உள்ள தணிக்கை குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களின் அறிவுறுத்தல்படி, புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று  முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கான பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது, மாதந்தோறும் முதியோர்களுக்கு வழங்கப்படும்  உதவித்தொகையில் 50 முதல் 70 பயனாளிகளுக்கான தொகை அம்பேத் ராஜா, உருவாக்கிய வங்கிக் கணக்கிற்கு செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. 

இதுகுறித்து அம்பேத் ராஜாவிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 3 ஆயிரம் பயனாளர்களுக்கு உதவித்தொகைக்கான பணப்பரிவர்த்தனையின்போது, தகுதி மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இல்லை என்ற காரணங்களுக்காக 50 முதல் 70 பயனாளர்களின் உதவித் தொகை திரும்ப வந்துவிடும் என்றும், அவ்வாறு வரும் பணத்தை அரசுக்கு திரும்ப செலுத்தாமல், தான் உருவாக்கிய வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்து வந்ததாகவும் அம்பேத் ராஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.  

மேலும், பணப்பரிமாற்றம் செய்வதற்கான கமிஷன் தொகையாக பயனாளி ஒருவருக்கு 30 ரூபாய் வீதம் அரசிடம் இருந்து வங்கிக்கு வழங்கப்படும் தொகையையும், தனது  வங்கி கணக்கிற்கு மாற்றி நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார் அம்பேத் ராஜா. 

மோசடி செய்த பணம் குறித்து அதிகாரிகள் கேட்டபோது, அவை அனைத்தையும், பங்கு சந்தையில் இழந்து விட்டதாக சர்வ சாதரணமாக கூறி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார் அம்பேத் ராஜா. இந்நிலையில் தனி வட்டாட்சியர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ள மாவட்ட நிர்வாகத்தினர், மோசடி செய்யப்பட்தொகையை மூன்று வட்டாட்சியர்களும் சேர்ந்து அரசுக்கு செலுத்த வேண்டும்  என உத்தவிட்டுள்ளனர். 

வாழ வழியின்றி ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சிறு தொகையின் மூலம் தங்கள் வாழ்க்கையை சிரமத்திற்கு இடையே சமாளிக்கும் நிலையில், அந்த தொகையை கூட  தனி வட்டாட்சியரால் நியமிக்கப்பட்ட கணினி ஆப்ரேட்டர் மோசடி செய்து திருடியதும், அதைக்கூட கண்காணிக்காமல் மக்களின் வரிப்பணத்தில் ஊதியமாக பெரும்  தனி வட்டாட்சியர்கள் அலட்சியமாக இருந்ததும் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Night
Day