மக்களின் ஆசையை தூண்டி விளம்பரம் - ரூ.15 கோடி மோசடி செய்த பட்டதாரிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் 300 பேரிடம் சுமார் 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்த 4 பொறியியல் பட்டதாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மோசடி பேர்வழிகள் சிக்கியது எப்படி? இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தமிழ் அன்னை ஹாலிடேஸ் லிமிடெட், அன்னை கேப்பிட்டல் சொல்யூஷன்ஸ், அன்னை இன்ஃபோ சொல்யூஷன்ஸ் மற்றும் அன்னை அகடாமி பிரைவேட் லிமிடெட் ஆகிய பெயர்களை கொண்ட நிறுவனமானது இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களான தினேஷ் குமார், பிரேம் கிருபால், திலீப் குமார் மற்றும் அருண்குமார் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடத்தி வந்துள்ளனர். இந்த நான்கு பேரும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கல்வி தொடர்பான நிறுவனங்களை ஆரம்பித்தப் பிறகு, ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிகம் லாபம் கிடைப்பதாக விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பிய பொதுமக்கள் லட்சக்கணக்கான பணத்தை தமிழ் அன்னை ஹாலிடேஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

பிரபல சீட்டிங் நிறுவனங்களான ஹிஜாவு, ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தது போலவே, இந்த நிறுவனமும் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் 17 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி மணலி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற நபர் தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடம் இருந்து 88 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தமிழ் அன்னை ஹாலிடேஸ் லிமிடெட் என்ற இந்த ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

சொன்ன தேதியில் இந்த 4 பொறியியல் பட்டதாரிகளும் வட்டியும் தராமல் அசலும் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுதொடர்பாக 2022 ஆம் ஆண்டு பாலாஜி புகார் அளித்ததை அடுத்து, 4 பொறியியல் பட்டதாரிகளையும் போலீசார் தேடி வந்தனர். இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 4 பட்டதாரிகளையும், தனிப்படை போலீசார் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 15 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் இருந்து ஏமாற்றிய பணத்தை எங்கு முதலீடு செய்து இருக்கிறார்கள், என்பது தொடர்பாக 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் இதுபோன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என காவல்துறை எவ்வளவோ எச்சரித்தாலும், பலர் இன்னும் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியமாகவே உள்ளது. 

Night
Day