வீடுகளை லீசுக்கு விட்டு ரூ.5 கோடி மோசடி - நிதன்யா எண்டர்பிரைசஸ் மீது குவியும் புகார்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லீசுக்கு வீடு தருவதாகக்கூறி விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் சுருட்டியதாக தனியார் நிறுவனம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... மக்களை நிர்கதியாக நிற்கவைத்த நிதன்யா நிறுவனத்தின் மோசடி வேலைகள் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

புகைப்படத்தில் காணும் இந்த இருவர் தான் நிதன்யா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி வீடுகளை லீசுக்கு விட்டு 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கேடிகளான தம்பிதுரை மற்றும் நளினி... பகட்டான உடை அணிந்து பகல் கொள்ளையடித்த பகாசூரன்கள் இருவர் மீதும் நாளுக்கு நாள் குவிந்து வரும் புகார்கள் ஏராளம்.

சென்னை, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் லீசுக்கு இருப்பதாக OLX  மூலம் விளம்பரப்படுத்தியுள்ளது ஊரப்பாக்கத்தில் இயங்கி வரும் நிதன்யா என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம்.

இதை பார்த்து வாடகைக்கு குடியிருந்த தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்ப்பவர்களும் அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

தங்களிடம் சிக்கியவர்களிடம் எல்லாம் ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடம் என லீசுக்கு ஒப்பந்தம் போட்டு 3 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை பணத்தை லீஸ் தெகையாக அள்ளியது நிதன்யா என்டர்பிரைசஸ் நிறுவனம்.

அதே சமயம் வீட்டு உரிமையாளர்களிடம் வீடு வாடகைக்கு ஆள் பிடித்து தருவதாக நிதன்யா நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

வீட்டு வாடகை தங்கள் மூலமாக வீட்டு உரிமையாளருக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் தனது ஒப்பந்தத்தில் போட்டிருந்ததால், வாடகை வரும் என்ற நினைப்பில் உரிமையாளர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

ஆனால் வாடகை தருவதாக ஒப்பந்தம் போட்ட வீட்டை லீசுக்கு விட்டு காசு பார்த்துள்ளது நிதன்யா நிறுவனம்... கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் 5 கோடி ரூபாய் வரை சுருட்டிய நிதன்யா நிறுவனம், கடந்த 3 மாதங்களாக வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் வீட்டில் குடியிருந்தவர்களை நேரில் போய் பார்த்த வீட்டு உரிமையாளர்கள், வாடகை தரவில்லையா எனக்கேட்டுள்ளனர்... அப்போது என்னது வாடகையா, நாங்கல் லீசுக்கு தானே வீடு எடுத்துள்ளோம் என குடியிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

அப்போது தான் தாங்கள் மோசம் போனது வீட்டு உரிமையாளர்களுக்கு தெரிய வந்தது... உடனடியாக ஊரப்பாக்கத்தில் இயங்கி வரும் நிதன்யா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்று வீட்டு உரிமையாளர்கள் சீற்றம் காண்பித்துள்ளனர்.

இதனால் வீட்டில் குடியிருந்தவர்களுக்கு நெருக்கடி கொடுத்த வீட்டு உரிமையாளர்கள், வாடகையை கொடு, இல்லையென்றால் வீட்டை காலி செய் என வீடு கட்டியுள்ளனர்.

அப்போது தான் லீசுக்கு வீட்டை விட்டு நிதன்யா நிறுவனம் தங்களை நிர்கதியாக நிற்கவைத்துள்ளது குடியிருந்தவர்களுக்கு புரிந்துள்ளது.

இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்த நிலையில், குடியிருந்தவர்களும், உரிமையாளர்களும் மீண்டும் நிதன்யா என்டர்பிரைசுக்கு நேரில் சென்றனர்.

அப்போது தங்களை போலவே ஏராளமானோர் கதறி வருவதை கண்டு இரு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர்... பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் தங்கள் லீஸ் பணத்தை உடனே திருப்பிக் கொடுக்கும்படி வலியுறுத்த, விரைவில் ஃபுல் செட்டில்மெண்ட் என போக்கு காட்டியுள்ளார் அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர்.

இதையடுத்து மறுநாள் சென்று பார்த்த போது நிதன்யா நிறுவனமே காணாமல் போய், அங்கு திண்டுக்கல் பூட்டு தொங்குவதை கண்டு வீட்டு உரிமையாளர்களும், லீசுக்கு குடியிருந்தவர்களும் நொந்து போனார்கள்.

உடனடியாக தாங்கள் ஏமாற்றப்பட்டது பற்றி தாம்பரம் காவல் நிலையத்தில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் குவிந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

நிதன்யா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தங்கதுரை மற்றும் மேனேஜர் நளினி இருவர் மீதும் இரு தரப்பினரும் குற்றம் சுமத்தினர்.

கடந்த மூன்று மாதங்களாக நிதன்யா என்டர்பிரைசஸ் நிறுவனம் மீது, பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம், தாம்பரம், சங்கர் நகர், மாங்காடு ஆகிய காவல் நிலையத்திலும் புகார் அளித்த போதிலும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே உடடினயாக துரித நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட அறிவழகன் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து லீசுக்கு விட்ட புகாரில், நளினி மற்றும் தங்கதுரை இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தடுத்து நிதன்யா நிறுவனம் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், அனைத்து காவல் நிலையத்திலும் பதிவாகியுள்ள வழக்கு விவரங்களை தாம்பரம் இணை ஆய்வாளர் அலுவலக போலீசார் சேகரித்து வருகின்றனர்... இனியாவது போலீசாரின் நடவடிக்கை தீவிரமடையும் என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Night
Day