உடல் நிலை பாதிக்கப்பட்டு சிவக்குமாரும், சுமதியும் உயிரிழப்பு - நிற்கதியாய் நிற்கும் 3 பிள்ளைகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்களது 3 பிள்ளைகளும் வறுமையில் தவித்து வருகின்றனர். கல்விக்கும், வாழ்வாதாரத்திற்கும் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  
 
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார் - சுமதி. இவர்களுக்கு சுவாதி, ஸ்வேதா என 2 மகள்களும், சுவேஷ்வர் என்ற மகனும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சுமதி உயிரிழந்தநிலையில், டெய்லர் வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார் சிவக்குமார். இந்த நிலையில், அவரும் 2 மாதத்திற்கு முன்பாக திடீரென உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்தார். தாய், தந்தையை இழந்து 3 பிள்ளைகளும் நிற்கதியாய் நிற்கின்றனர்.  வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் மூவரும் படிப்பை விடாமல் தொடர்ந்து வருகின்றனர். 

கூத்தாநல்லூர் அரசு பள்ளியில் ஸ்வாதி 12ம் வகுப்பும், ஸ்வேதா 11ம் வகுப்பும், தனியார் பள்ளியில் சிவேஷ்வர் 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பெற்றோரை இழந்துள்ளநிலையில், மூவரின் படிப்பும், பாதுகாப்பும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 

ஓழுகும் கூரைவீட்டில் வசிக்கும் இவர்களுக்கு புதிய வீடும், கல்விக்கும், வாழ்வாதாரத்திற்கும் நிதியுதவி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாய், தந்தை இழந்து திக்கு திசை தெரியாமல் தவிக்கும் 3 பிள்ளைகளுக்கு கை கொடுத்து வழிகாட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

varient
Night
Day