டிஎஸ்பி சஸ்பெண்ட் ஆன மறுநாளே மதுபான விற்பனை படுஜோர்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மறுநாளே கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை களைகட்டியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உயரதிகாரிகள் அழுத்தம் தருவதாக கூறிய விவகாரத்தில் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல்துறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறையில் பதவி ஏற்றதில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 23 பார்களை பூட்டி சீல் வைத்தார். இது விளம்பர திமுக அரசின் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. சுந்தரேசனை மாறுதல் செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்த நிலையில், காவல்துறை மேலதிகாரிகள் அழுத்தம் காரணமாக இவரது வாகனம் பறிக்கப்பட்டது. மேலும் உளவுத்துறை ஐஜி செந்தில்வேல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவஆசீர்வாதம் ஆகியோர் வற்புறுத்தலின் பேரில் தான் பழிவாங்கப்படுவதாக பேட்டியளித்ததை தொடர்ந்து டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த நாளில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் பூட்டி கிடந்த சட்டவிரோத மது பார்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதில், திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சித்தர் காடு பகுதியில் காவிரிக்கரை அருகில் செயல்படும் டாஸ்மார்க் கடையில், பொது வெளியில் அட்டைப் பெட்டியில் வைத்து மது விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெட்ட வெளியில் மதுபானம் விற்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இரவு கணக்கு முடித்து செல்லும் டாஸ்மாக் மேற்பார்வையாளர் இப்படி அதிகளவில் மதுபான பாட்டில்களை விற்பனை செய்ய எப்படி அனுமதித்தார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day