எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாமக்கல் மாவட்டத்தில், வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத ஏழை எளிய மக்கள், சட்டவிரோதமாக தங்களது கிட்னியை விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
குமாரபாளையம் அடுத்த ஆனங்கூரைச் சேர்ந்த தனசேகரன், கமலா தம்பதியினர் விசைத்தறி தொழலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், குடும்ப தேவைக்காக நிதி நிறுவனத்தில் அதிக வட்டிக்கு கடன் பெற்றுள்ளனர். கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் சரிவர வேலை இல்லாததால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துள்ளனர்.
அப்போது நிதி நிறுவன ஊழியர்கள் கமலாவிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததோடு, அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கிட்னி விற்பனைக்கான இடைத்தரகர் ஒருவர், கமலாவை அணுகி கிட்னியை விற்பனை செய்தால் 4 லட்சம் ரூபாய் பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். கடன் நெருக்கடியில் இருந்த கமலாவும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து திருச்சி டோல்கேட் அருகே செயல்படும் பிரபல தனியார் மருத்துவமனை, இடைத்தரகர் மூலம் கமலாவின் கிட்னியை பெற்று பணம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கமலாவை போன்றே சாமுண்டூர் பகுதியில் வசித்து வரும் கட்டிட தொழிலாளியான அவரது சகோதரர் லட்சுமணனும், அதிக வட்டிக்கு கடன் வாங்கி அதனை செலுத்த முடியாததால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இடைத்தரகர் மூலமாக தனது கிட்னியை விற்பனை செய்து அதன் மூலம் பெற்ற 4 லட்சம் ரூபாயை கொண்டு கடனை செலுத்தி உள்ளார்.
கிட்னி விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும், இடைத்தரகர்களான திமுக பிரமுகர் ஆனந்தன், முருகன் ஆகியோர் மீது பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.